பரனூர் மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளின் இரண்டாம் ஆண்டு கோலோக விஜய யாத்ரை!
தமிழ்நாட்டில் சீர்காழி, மயிலாடுதுறை ஊர்களுக்கு மத்தியில் திருநாங்கூர் என்ற திவ்ய தேசம் உள்ளது. இந்த நாங்கூர் திவ்ய தேசத்தில் அரிமேய விண்ணகரம், திருத்தெற்றியம்பலம், வன்புருஷோத்தமன், வைகுண்ட விண்ணகரம், காவளம்பாடி, செம்பொன்செய் கோயில், கீழச்சாலை, திருமணிக்கூடம், பார்த்தன்பள்ளி, தலைச்சங்கை நான்மதியம், திருவாலி, திருநகரி, கோலவில் ராமர் போன்ற திவ்ய தேசங்கள் உள்ளன. இந்த திவ்ய தேசங்கள் எல்லாம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. திருநகரியில் தான் திருமங்கை ஆழ்வாரை பகவான் தடுத்தாட்கொண்டு, எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்தார். நாங்கூரில் 11 கருட சேவையும், திருவாலியில் நடக்கும் வேடுபறி உற்சவமும் மிகவும் புகழ்பெற்றது. நாம் அங்கு ஸ்ரீமதி ஜெயந்தி ஜானகிராமன் நினைவு திராவிட வேத ஆகம பாடசாலையை நிறுவி பல தொண்டுகள் செய்து வருகின்றோம்.
ஸ்ரீ ஸ்ரீ அண்ணா கோலோகத்திற்கு விஜயம் செய்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டது. அவர் கோலோக விஜயம் செய்த நாளில் – அவர் நமக்கு செய்த கிருபைக்கு நாம் ஏதாவது செய்து நன்றி செலுத்த வேண்டும் என்று நம் ஸ்ரீ ஸ்வாமிஜி விரும்பினார். எப்படி நம் நன்றியை காண்பிப்பது? அவருக்கு பிடித்த செயல்களால், அவருக்கு எது உகப்பானதோ, அவருக்கு எதை செய்தால் மிகவும் சந்தோஷப்படுவாரோ, அதை செய்து நம் நன்றியை காண்பிக்க வேண்டும் என்று ஸ்ரீ ஸ்வாமிஜி முடிவு செய்தார். சென்ற வருட கோலோக யாத்ரை நாளில், கோவிந்தபுரம் சைதன்ய குடீரத்தில் நாம சங்கீர்த்தனம் செய்யும் 108 பாகவதர்களை வரவழைத்து, அவர்களுக்கு பூஜை செய்து விசேஷமான சம்மானங்கள் சமர்பித்து, ததி ஆராதனையும் நடத்தப்பட்டது.
https://www.facebook.com/share/v/15KA9URMmT/?mibextid=wwXIfr
இந்த வருடம் 08-09-2025 திங்கள்கிழமை, ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவின் இரண்டாவது கோலோக விஜய யாத்ரை தினம். அன்று 54 திவ்ய தேசங்களில் பூஜை செய்யும் பட்டர்களை அவர்களுடைய மனைவியுடன் வரவழைத்தோம். அவர்களுக்கு பட்டுப் புடவை மற்றும் வேஷ்டிகள் எல்லாம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை அணிந்து கொண்டு வந்தார்கள். அவர்கள் அனைவரையும் ஸ்ரீ வன்புருஷோத்தமன் கோவிலில் ஒன்று சேர வைத்து, அங்கிருந்து சத்ரம், சாமரம், திருச்சின்னம், தண்டம், தீவட்டி, வானவேடிக்கை, மங்கள வாத்தியம் இவைகளுடன் பெரியவாச்சான் பிள்ளை திருமாளிகைக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். வழியெல்லாம் பூத்தூவி அவர்களை வரவழைத்தார்கள். பெரியவாச்சான் பிள்ளை திருமாளிகை அடைந்தவுடன் அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. ஹாரத்தி எடுக்கப்பட்டது. பிறகு அவர்கள் உள்ளே அழைத்து வரப்பட்டு, ஆசனத்தில் அமர்த்தி, மாலை, மலர்கிரீடம் அணிவித்து, பாத பூஜை செய்யப்பட்டது. சம்மானங்கள் வழங்கப்பட்டன. ததி ஆராதனையும் நடந்தது. இப்படியாக இந்த வருட கோலோக விஜய யாத்ரை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவின் முடிவில் கும்பகோணம் ஸ்ரீ சுதர்சன பட்டர் பேசியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது – “கோவில்களில் பெருமாளுக்கும், தாயாருக்கும் வஸ்திரம் சாற்றி மாலை சாற்றி திருவாராதனம் செய்கின்றோம். அதேபோல் உபயதாரர்கள் வரும்பொழுது அவர்களுக்கு பரிவட்டம் கட்டி, மாலை சாற்றி மரியாதை செய்கின்றோம். முதன்முதலாக ஸ்ரீ ஸ்வாமிஜி தான் எங்கள் அனைவருக்கும் வஸ்திரம் கொடுத்து, மலர் கிரீடம் அமைத்து, மாலை சாற்றி, பாத பூஜை செய்து, பூரண கும்பம் கொடுத்து அழகு பார்த்து உள்ளார்கள்”.
ஸ்ரீ ஸ்வாமிஜியின் Bhavam என்ன? 108 திவ்ய தேச பெருமாள்களும், தாயார்களும் நம்முடைய தாய் தந்தையர்களே. அவர்களுடைய குழந்தைகள் நாம் அனைவரும். நம் அப்பா அம்மாவிற்கு திருவாராதனம் செய்து வருபவர்களை நாம் கொண்டாட வேண்டும் என்பதே ஸ்ரீ ஸ்வாமிஜியின் அவா. இந்த முறை ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவின் குருநாதரான ஸ்ரீ பகவன் நாம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனையும், ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவின் கோலோக விஜய யாத்ரையும் ஒரே நாளில் வந்தது கவனிக்கத்தக்கது.


















